பகலில் அனல் காற்று வீசுவதால் சாலைகள் வெறிச்சோடின
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருவதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருவதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
வெயில் சுட்டெரித்தது
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தர்ப்பூசணி, பதநீர், நுங்கு உள்ளிட்டவைகளின் விற்பனையும் சூடு பிடித்தது. குளிர்பான கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது தேர்தல் காலம் என்பதால் வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்களையும் கொளுத்தும் வெயில் அவதிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், மதுைர, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை கூடுதலாக 2 டிகிரி அதிகரிக்க கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
சாலைகள் வெறிச்சோடின
வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். வெயில் குறைந்த பின்னர் மாலையில் தான் தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை காண முடிந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலுடன் அனல் காற்று வீசியதால் வேட்பாளர்களும் பிரசாரம் செய்ய செல்லவில்லை. மாலை 5 மணிக்கு மேல் தான் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றனர்.
கொளுத்தும் வெயிலால் குளிர்பான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
காரைக்குடி பகுதியில் தற்போது அதிகளவில் அனல் காற்று வீசிவருவதால் பகல் நேரத்தில் கல்லூரி சாலை, 100அடி சாலை, செக்காலை சாலை, அழகப்பா பல்கலைக்கழக சாலை புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சாலைகள் மதிய நேரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதை பார்க்க முடிந்தது.
Related Tags :
Next Story