உளுந்தூர்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே திடீர் வாக்குவாதம் - போலீஸ் நிலையம் முற்றுகை 50 பேர் மீது வழக்கு


உளுந்தூர்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே திடீர் வாக்குவாதம் - போலீஸ் நிலையம் முற்றுகை 50 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 April 2021 5:35 PM GMT (Updated: 2 April 2021 5:38 PM GMT)

உளுந்தூர்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்தனர். இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மணிக்கண்ணன் நேற்று கந்தசாமிபுரத்தில் உள்ள குமரகுரு எம்.எல்.ஏ. வீட்டின் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் தி.மு.க. தரப்பினருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே குமரகுரு எம்.எல்.ஏ.வை தரக்குறைவாக பேசிய ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க. நகர செயலாளர் துரை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில் உள்பட 25 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

பிரசாரத்துக்கு சென்ற தங்களை அ.தி.மு.க. வேட்பாளரின் மகன் மற்றும் அவரது தம்பி உட்பட 25-க்கும் மேற்பட்டோர் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தனர். அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுபற்றி முழுமையான விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதனால் காவல்துறையினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் நமச்சிவாயம், சாய்ராம் உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

அ.தி.மு.க., தி.மு.க.வினர் அடுத்தடுத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story