புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு


புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு
x
தினத்தந்தி 3 April 2021 1:50 AM IST (Updated: 3 April 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

புனித வெள்ளியையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.

முருகபவனம்:
புனித வெள்ளியையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. 
புனித வெள்ளி
இயேசு கிறிஸ்து, புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார். இதனை நினைவு கூறும் வகையில் இயேசுவின் பாடுகள் என சிலுவை பாதையும், தூம்பா பவனியும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு புனித வளனார் பேராலயத்தில், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் திருப்பாடுகளின் வழிபாடு நேற்று மாலையில் நடைபெற்றது. இதனை பங்கு தந்தையர்கள் சகாயராஜ், ஜெயசீலன் பிரபு, சாம்சன் ஜெபராஜ், பாதிரியார் பாலா ஆகியோர் இணைந்து நிறைவேற்றினர். 
இந்த திருப்பாடுகளின் வழிபாடு சிலுவைப்பாதையுடன் தொடங்கியது. இதில் இயேசு தீர்ப்பிடப்படுதல், சிலுவையை சுமத்தல், சிலுவையில் அறையப்படுதல், அவரின் இறப்பு, கல்லறையில் அடக்கம் செய்தல் என 14 நிலைகளாக நினைவு கூறப்பட்டன. அதைத்தொடர்ந்து இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து மற்றும் தூம்பா பவனி நடைபெற்றது. 
சிலுவைப்பாதை வழிபாடு
திண்டுக்கல் சி.எஸ்.சி. தூய பவுல் ஆலயத்தில் தலைமை போதகர் டேவிட்சன் பால் ஜேக்கப் தலைமையிலும், செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையிலும் சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். 
கொடைக்கானலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கொடைக்கானலில் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூறும் விதமாக சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது. கொடைக்கானல் அண்ணா சாலை, கே.சி.எஸ். திடல், மூஞ்சிக்கல் வழியாக திரு இருதய ஆண்டவர் ஆலயம் வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது. 
இதேபோல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி, குமரன் திருநகர், என்.ஜி.ஓ. காலனி உள்பட திண்டுக்கல் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பங்கு தேவாலயங்களிலும் புனித வெள்ளியையொட்டி திருப்பாடுகளின் வழிபாடு அந்தந்த பங்கு தந்தையர்கள் தலைமையில் நடைபெற்றது. 

Next Story