தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்


தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
x
தினத்தந்தி 7 April 2021 12:11 PM GMT (Updated: 7 April 2021 12:11 PM GMT)

தூத்துக்குடியிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு பொடப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை மையம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையொட்டி ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த மண்டல தேர்தல் அலுவலர்கள் மூலம் தூத்துக்குடி வ.உ.சி அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு அதற்கென ஒதுக்கப்பட்டு இருந்த அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-
மூன்றடுக்கு பாதுகாப்பு
தூத்துக்குடி வ.உ.சி. அரசு என்ஜினியரிங் கல்லூரியில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறை அனைத்தும் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு உள்ளன. அந்த அறை கண்காணிப்பு கேமிரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அறையின் முன்பு துணை ராணுவ வீரர்கள் 4 பேர் துப்பாக்கியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். மொத்தம் 72 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு உள்ள கட்டிடத்தில் 2-வது அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இங்கு தமிழ் நாடு சிறப்பு போலீசார் 50 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அரசு என்ஜினீயரிங் கல்லூரியை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 150 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
மையத்தில் ஆய்வு
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் சுமார் 272 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அவ்வப்போது மாவட்ட கலெக்டரும், நானும்(மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு) நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story