சட்டசபை தேர்தல் நடந்த மறுநாளில் கள்ளக்குறிச்சி கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை


சட்டசபை தேர்தல் நடந்த மறுநாளில் கள்ளக்குறிச்சி கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 7 April 2021 5:27 PM GMT (Updated: 7 April 2021 5:27 PM GMT)

சட்டசபை தேர்தல் முடிந்த மறுநாளில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

நேர்முக எழுத்தர்

கள்ளக்குறிச்சி கேசவலு நகரை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 47). இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி லலிதா (45), மகன் அருளானந்தம் (17). சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் அருளானந்தம் பிளஸ்-2 படித்து வருகிறார். இதனால் லலிதா சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து மகனுடன் வசித்து வருகிறார். 

கள்ளக்குறிச்சியில் தனியாக வசித்து வந்த சிவபாலன் அவ்வப்போது சென்னைக்கு சென்று மனைவி மற்றும் மகனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

பணிக்கு வரவில்லை

இந்த நிலையில் சிவபாலன் அதே தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் பூபதி(30) என்பவரிடம் பணம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று காலை 9 மணியளவில் பூபதி, சிவபாலனின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சிவபாலனின் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு மூடி இருந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

பின்னர் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சிவபாலன் வேட்டியால் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூபதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவபாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

கலெக்டர் கேட்டறிந்தார்

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கிரண்குராலா மருத்துவமனைக்கு சென்று சிவபாலன் உடலை பார்த்து அவரது தற்கொலை சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். 

மேலும் சிவபாலன் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது மனைவி, மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். கணவனின் உடலை பார்த்து மனைவியும், தந்தையின் உடலை பார்த்து மகனும் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

போலீசார் தீவிர விசாரணை

பின்னர் பூபதி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாலனின் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
சட்டசபை தேர்தல் முடிந்த மறுநாளில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story