வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தோழமை கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும்


வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தோழமை கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 April 2021 2:38 PM GMT (Updated: 8 April 2021 2:38 PM GMT)

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தோழமை கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும்

கோவை

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தோழமை கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

வாக்கு எண்ணிக்கை வரை ஒரு மாத காலத்துக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது பற்றி தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபோது வராத பயம் அ.தி.மு.க தலைவர்கள் அறிவித்தபோது பயம் அதிகரித்துள்ளது.

அ.தி.முக. தலைவர்களின் அறிவிப்பு எதிர்க்கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் தோழமை கட்சியினர் விழிப்புடன் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கவனமாக இருக்க வேண்டும்.

நிம்மதி இழந்து உள்ளனர்

தி.மு.க. வெற்றி பெறும் என தெரிந்த பிறகு எதிர்ப்பவர்கள் அனைவரும் நிம்மதி இழந்து உள்ளனர். ஓட்டுப் பதிவு நாளன்று பகல் 11 மணி அளவிலேயே தி.மு.க. ஆட்சி மலரும் என்பது தெரிந்து விட்டது. தோல்வி உறுதி என்று தெரிந்ததால் அ.தி.மு.க. தொண்டர்கள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவில்லை. 

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால் அ.தி.மு.க. தொண்டர்கள் தொய்வடைந்து விட்டனர். 

வன்முறை

ஒரு சில அமைச்சர்களின் தொகுதிகளில் மட்டும் தேர்தல் பணி நடப்பதுபோல மாயத்தோற்றத்தை அ.தி.மு.க. வினர் உருவாக்கினார்கள். அவர்கள், வெற்றி பெற முடியாது என்று தெரிந்த பிறகு எதிர்க்கட்சியினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் வேலையை பல இடங்களில் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story