6 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு 160 கிலோமீட்டர் பயணித்து சென்ற தேர்தல் அலுவலர்கள்
6 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு 160 கிலோமீட்டர் பயணித்து தேர்தல் அலுவலர்கள் சென்றனர்.
நெல்லை, ஏப்:
மாஞ்சோலை மேல் கோதையாறு அணை பகுதியில் 6 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு 160 கிலோ மீட்டர் பயணித்து தேர்தல் அலுவலர்கள் சென்றனர்.
நீண்டதூர வாக்குச்சாவடி
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையானது இயற்கை வளத்தை அள்ளித் தரும் எழில்மிகு பகுதியாகும். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல் கோதையாறு, கீழ் கோதையாறு அணைகள் அமைந்துள்ளன. இதில் மேல் கோதையாறு அணை பகுதி பத்மநாதபுரம் தொகுதிக்குள் அமைந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலையொட்டி பத்மநாதபுரம் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில் ஒன்று, மேல் கோதையாறு அணையில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு கடந்த 6-ந்தேதி வாக்குப்பதிவு நடத்துவதற்காக பத்மநாதபுரம் தொகுதி தேர்தல் அலுவலர்கள் 5-ந்தேதி அங்கிருந்து புறப்பட்டு வாக்குச்சாவடியை அடைந்தனர்.
அதாவது பத்மநாதபுரத்தில் இருந்து வாக்குச்சாவடி அலுவலர்கள், போலீசார், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் வழியாக சுமார் 160 கிலோ மீட்டர் தூரம் பயணித்து மேல் கோதையாறு வாக்குச்சாவடியை சென்றடைந்தனர். இதில் மலைப்பாதையில் மட்டும் 60 கிலோ மீட்டர் தூரம் பயணித்து உள்ளனர். அங்கு வசிக்கும் மக்களில் 6 பேர் மட்டுமே வாக்காளர்களாக உள்ளனர். அவர்களுக்காக அங்குள்ள ஒரு கட்டிடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள 6 வாக்காளர்களும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
உதவி கலெக்டரிடம் ஒப்படைப்பு
பின்னர் அந்த வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்று பத்மநாதபுரம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன் வசம் ஒப்படைத்தனர். அவர் அந்த எந்திரத்தை வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து பூட்டி சீல் வைத்தார்.
முன்னதாக உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளும் அந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
சாலை வசதி
மேல் கோதையாறு அணை பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், அங்கு செல்வதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேரடி சாலை வசதி கிடையாது. இதனால் மேல் கோதையாறு அணையின் பாதுகாப்பு, நெல்லை மாவட்ட போலீசார் வசம் உள்ளது. மேலும் அணையை பராமரித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்மின் திட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வழியாகவே அங்கு சென்று வருகிறார்கள்.
அதேபோல் ஒவ்வொரு தேர்தலின்போதும் அலுவலர்கள், போலீசார் நெல்லை மாவட்டம் வழியாகவே மேல் கோதையாறு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story