மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவ அதிகாரி பரிதாப சாவு + "||" + Doctor killed in accident

பெண் மருத்துவ அதிகாரி பரிதாப சாவு

பெண் மருத்துவ அதிகாரி பரிதாப சாவு
நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி பெண் மருத்துவ அதிகாரி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில், 
நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி பெண் மருத்துவ அதிகாரி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெண் டாக்டர்
நாகர்கோவில் அருள் நகரைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 53). இவருடைய மனைவி ஸ்டெல்லா ஜெனட் (45). இவர்கள் இரண்டு பேரும் டாக்டர்கள். எய்ட்ஸ் கட்டுப்பாடு மாவட்ட திட்ட மேலாளராக ஸ்டெல்லா ஜெனட் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் அருகே சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென ஸ்டெல்லா ஜெனட் ஸ்கூட்டரின் பின்பகுதியில் மோதியது.
பரிதாப சாவு
இதில் அவர் நிலை தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் அவருடைய இடுப்பின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து காரணமாக அரசு பஸ் டிரைவரான கண்டன்விளை பகுதியைச் சேர்ந்த பழனி குமார் (48) என்பவரை கைது செய்தனர்.