கடையில் மேற்கூரையை உடைத்து ரூ.7½ லட்சம் கொள்ளை


கடையில் மேற்கூரையை உடைத்து ரூ.7½ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 9 April 2021 12:42 AM IST (Updated: 9 April 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.7½ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குழித்துறை, 
மார்த்தாண்டத்தில் கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.7½ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பிரபல கடை
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவா சுப்புராஜ் (வயது 45). இவர் மார்த்தாண்டம் பம்பம் பகுதியில் வீட்டின் கதவு, ஜன்னல்களுக்கு தேவையான திரை சீலைகள் மற்றும் மிதியடி உள்ளிட்டவை மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு சிவா சுப்புராஜ் மற்றும் பணியாளர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.
ரூ.7½ லட்சம் கொள்ளை
 நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து உள்ளே சென்றனர்.  அப்போது, அங்கு மேஜை திறந்து கிடப்பதை கண்டு சிவா சுப்புராஜ் அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.7½ லட்சம் பணம் மாயமாகி இருந்தது. 
மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் பதிவாகி இருக்கும் ஹார்டு டிஸ்க்கும் மாயமாகி இருந்தது. 
பின்னர் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 
அப்போது, கடையின் மாடியில் உள்ள மேற்கூரையான சிமெண்டு ஷீட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டனர். மர்ம நபர்கள் மேற்கூரையை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து விட்டு கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்கையும் திருடிச் சென்றது தெரிய வந்தது.
வலைவீச்சு
இதையடுத்து போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காண அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
மார்த்தாண்டத்தில் பிரபல கடையில் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story