வாக்குச்சாவடிகளில் தற்காலிகமாக பணியாற்றிய என்ஜினீயரிங் பட்டதாரிகள் சம்பளம் கிடைக்கவில்லை என புகார்
வாக்குச்சாவடிகளில் தற்காலிகமாக பணியாற்றிய என்ஜினீயரிங் பட்டதாரிகள் சம்பளம் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 தொகுதிகளிலும் கடந்த 6-ந் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது கொரோனா பரவலை தடுப்பதற்காக வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு முக கவசம், கை கழுவும் திரவம், கையுறை ஆகியவை வழங்கப்பட்டது. இந்த பணிகளில் சுகாதாரத்துறை மூலம் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்தநிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் தற்காலிகமாக பணியாற்றிய என்ஜினீயரிங் பட்டதாரிகள் சுமார் 30 பேர் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டையுடன் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்ரீதாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், அதிகாரிகள் எங்களுக்கு தேர்தல் பணியில் ஈடுபடும் போது ரூ.1,000 சம்பளம் வழங்குவதாக கூறினார்கள். நாங்களும் அன்று காலையிலிருந்து இரவு வரை வாக்காளர்களுக்கு கையுறை வழங்குதல், உடல் வெப்ப பரிசோதனை செய்தல், கிருமிநாசினி தெளித்தல் ஆகிய பணிகளை செய்து கொடுத்தோம். எங்களுக்கு சாப்பாடு மற்றும் டீ, பிஸ்கட் கூட தரவில்லை. மேலும் இதுவரை சம்பளமும் தரவில்லை. இப்போது சென்று கேட்டால் ரூ.250 தான் தருவோம் என்று கூறுகிறார்கள். அதையும் இதுவரை தரவில்லை. ஆதலால் எங்களுக்கு அதிகாரிகள் வாக்குறுதி அளித்தபடி ரூ.1,000 சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story