கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை


கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
x
தினத்தந்தி 9 April 2021 1:17 AM IST (Updated: 9 April 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள் வறண்டு விட்ட நிலையில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது

விருதுநகர்
மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள் வறண்டு விட்ட நிலையில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
 குடிநீர் பிரச்சினை 
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் குடிநீர் பிரச்சினை என்பது நிரந்தரமாக நீடிக்கும் நிலை இருந்து வருகிறது. அதிலும் தொடர் வறட்சி காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆனாலும் கடந்த ஆண்டு இறுதியில் மழை பெய்த நிலையில் ஓரளவு நீர்நிலைகளில் நீரை தேக்கி வைக்க வாய்ப்பு ஏற்பட்ட போதிலும் தற்போது கடும் வெயிலால் நீர் ஆதாரங்களும் வறண்டு விட்டன. 
மாவட்டத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் குடிநீர் தேவைக்கு பெரும்பாலும் நிலத்தடி நீரை நம்பி உள்ளனர். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து எதிர்பார்த்த அளவிற்கு தண்ணீர் கிடைக்காத நிலையில் குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. 
வினியோகம்
விருதுநகர் நகர் பகுதிக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டில் இருந்து வந்த போதிலும் ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் இருந்து கிடைக்கும் நிலத்தடி நீரைக் கொண்டு நகரில் குடிநீர் தேவையை சமாளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினசரி 35 முதல் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தினசரி 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. 
இதனால் நகரின் குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் நீர் ஆதாரங்கள் வறண்டு விட்ட நிலையில் மின் மோட்டார் பழுது, குழாய் உடைப்பு போன்ற பிரச்சினைகளாலும் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.. மேலும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த போதிலும் முறையாக அனைத்து கிராம பகுதிகளிலும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்காத நிலையே நீடிக்கிறது. 
வறண்டது 
விருதுநகருக்கு நீண்டகாலமாக குடிநீர் தேவையை சமாளிப்பதற்கு உதவி வரும் ஆனைக்கூட்டம் அணைப்பகுதி தற்போது முற்றிலுமாக வறண்டு விட்டது. அணைப்பகுதியில் உள்ள உறைகிணறுகள் மூலம் எடுக்கப்படும் குடிநீரே நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க உதவி வருகிறது. ஆனால் தற்போது இந்த அணைப்பகுதியும வறண்டு விட்டது. மேலும் ஒண்டிபுலி கல்குவாரியில் இருந்தும் குடிநீர் கிடைக்காத நிலையில் தற்போது உள்ளதைவிட கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதில் பெரும் சிரமம ்ஏற்பட வாய்ப்புள்ளது. 
இதேபோன்று மாவட்டத்தில் அனைத்து நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் கோடைகால குடிநீர் பிரச்சினை கடுமையாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தற்போதே கோடை கால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலம் தற்போது உள்ள குடிநீர் வினியோக நிலைமை குறித்து கண்டறிந்து தேவைப்படும் கிராமங்களுக்கு நீராதரத்தை பெருக்கவும், குடிநீர் வினியோகத்தை சீரமைக்கவும் தேவையான நிதி உதவி கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
வலியுறுத்தல்
மேலும் போதிய நிதி உதவி பெற்று உள்ளாட்சி அமைப்புகள ்நகர்ப்புற மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
இதற்காக மாவட்ட நிர்வாகம் தற்போது கோடை கால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தேவைப்படும் நிதிகுறித்து மதிப்பீடு தயாரித்து அரசிடம் இருந்து நிதிஉதவி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story