சிவகிரி அருகே அஞ்சல் நிலையத்தில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படும் வாடிக்கையாளர்கள்
சிவகிரி அருகே அஞ்சல் நிலையத்தில் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகிரி, ஏப்:
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் சிவகிரி துணை அஞ்சல் நிலையம் உள்ளது. இதன் கீழ் சிவகிரி அருகே தேவிபட்டணம் கிளை அஞ்சல் நிலையம் உள்பட 6 கிராம அஞ்சல் நிலையங்கள் உள்ளன. தேவிபட்டணத்தில் வங்கி சேவைகள் எதுவும் இல்லாததால், கிளை அஞ்சல் நிலையத்தில் விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை தொடங்கி, வரவு, செலவு நடத்தி வருகிறார்கள். மேலும் முதியோர் உதவித்தொகையும் அஞ்சல் நிலையம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர அஞ்சல் நிலையம் மூலமாக நடைபெறும் ஆயுள் காப்பீடு, சிறுசேமிப்பு, ஆர்.டி., செல்வ மகள் சிறுசேமிப்பு போன்றவற்றில் ஏராளமானோர் தங்களது பணத்தை முதலீடு செய்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக தபால்நிலையம் மூலமாக சிறு சேமிப்பு கணக்கில் இருந்து பணங்களை எடுப்பதற்கும், போடுவதற்கும் முடியாமல் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். அவசர தேவைக்கு சிவகிரி துணை அஞ்சல் நிலையத்திற்கு சென்று பணம் எடுத்து கொள்ளுமாறு அதிகாரிகள் கூறுவதால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். தேவிபட்டணத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிவகிரிக்கு சென்று வருவதற்கு பணச் செலவும், காலவிரயமும் ஏற்படுகிறது. எனவே தேவிபட்டணம் கிளை அஞ்சலகத்தில் பணம் வரவு- செலவு செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story