விளைநிலத்தை சத்து நிறைந்த மண்ணாக மாற்றுவது எப்படி?


விளைநிலத்தை சத்து நிறைந்த மண்ணாக மாற்றுவது எப்படி?
x
தினத்தந்தி 8 April 2021 8:44 PM GMT (Updated: 8 April 2021 8:44 PM GMT)

விளைநிலத்தை சத்து நிறைந்த மண்ணாக மாற்றுவது எப்படி? என்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

அலங்காநல்லூர், 

விளைநிலத்தை சத்து நிறைந்த மண்ணாக மாற்றுவது எப்படி? என்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

வேளாண் மாணவிகள்

மதுரை வேளாண்மைக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நிவிதா, பத்மபிரியா, பிரேமா, பிரியதர்ஷினி, ரம்யா கிருஷ்ணா, ரவீணா ஆகியோர் அலங்காநல்லூரில் கிராம தங்கல் திட்டத்தின்படி முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் வேளாண் மாணவிகள் பாலமேடு மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி விஜயன் என்பவரது கொய்யா தோட்டத்தை நேரில் சென்று பார்த்தனர்.
பின்னர் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். இயற்கை விவசாயத்துக்கு ஜீவாமிர்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை எப்படி தயார் செய்வது குறித்து விளக்கம் அளித்து உள்ளனர். இது குறித்து வேளாண் மாணவிகள் கூறியதாவது:-

சத்து நிறைந்த மண்ணாக...

விளைநிலத்தை சத்து நிறைந்த மண்ணாக மாற்றுவதற்கு ஜீவாமிர்தம் அவசியம். நாட்டு பசுஞ்சாணம் 10 கிலோ, நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, கரும்புச்சாறு 4 லிட்டர், இருவிதை இலை தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ, பண்ணைகளின் வரப்பில் இருந்து எடுக்கப்பட்ட நிலத்தின் மண் கையளவு, தண்ணீர் 200 லிட்டர். இவற்றை கலந்தால் ஜீவாமிர்தம் தயார் ஆகி விடும்.
விதை நேர்த்தி செய்ய உள்ள விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் நன்றாக ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனைய விட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.ஜீவாமிர்தம் பாய்ச்சப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது. இதை நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது.வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும். ஜீவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது. இது தெளிப்பதால் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story