தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை,
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து கொடி பட்டத்தை அம்மன் பெற்று கொண்டு சிம்ம வாகனத்தில் கோவிலுக்கு எழுந்தருளினார். அதன்பின்னர் நள்ளிரவில் கொடியேற்றம் நடந்தது.
இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிம்ம வாகனம், காமதேனு வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி திருவீதி உலா வந்தார்.
தீச்சட்டி, பால்குடம் எடுத்த பக்தர்கள்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தீச்சட்டி, சக்தி கரகம், பால்குட ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீச்சட்டி, பால்குடம் எடுத்துக்கொண்டு தெப்பக்குளத்தை சுற்றி வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். 21 அக்னி சட்டியையும் எடுத்து கொண்டு பக்தர்கள் வந்தது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
தீர்த்தவாரி
இந்த நிகழ்ச்சியை காண தெப்பக்குளத்தை சுற்றி ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
வருகிற 14-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story