பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கொரோனா
பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கொரோனா உறுதியானது.
ஈரோடு
பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கொரோனா உறுதியானது.
அ.தி.மு.க. வேட்பாளர்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. எனினும் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தநிலையில் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் ஜே.கே. என்கிற ஜெயக்குமார். இவர் தேர்தலையொட்டி 15 நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கொரோனா
பிரசாரத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்ற ஜெயக்குமார், நேற்று முன்தினம் சற்று சோர்வாக காணப்பட்டார். உடனே அவர், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, ஜெயக்குமார், அதே மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, தனிமைப்படுத்திக்கொண்ட அவரை, இன்னும் 10 நாட்களுக்கு யாரும் சந்தித்து பேசவோ அல்லது தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என்று அவரது மனைவி சண்முகப்பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து ஜெயக்குமாருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அலுவலகத்தினர் உள்பட 60 பேருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.
மேலாளருக்கு தொற்று
புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இதன் மேலாளராக கோவையை சேர்ந்த ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் கோவையில் இருந்து புளியம்பட்டியில் உள்ள வங்கிக்கு வந்து செல்கிறார்.
இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
வங்கி மூடப்பட்டது
இதையடுத்து புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தினர் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நகராட்சி ஊழியர்கள் வங்கியில் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலாளருடன் வங்கியில் பணியாற்றியவர்களுக்கு சுகாதார ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர்.
இதையடுத்து வங்கி மூடப்பட்டது. ஊழியர்களுக்கு பரிசோதனை முடிவு வரும் வரை வங்கி மூடப்பட்டு இருக்கும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே வங்கி வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள அய்யன் சாலை வங்கியில் வங்கி தொடர்பான சேவையை பெற்றுக்கொள்ளலாம் என வங்கி கதவில் அறிவிப்பு ஒட்டி வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story