3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி; ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை


3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி; ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 8 April 2021 9:44 PM GMT (Updated: 8 April 2021 9:44 PM GMT)

3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை ஆனது.

ஈரோடு
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை ஆனது.
3 நாட்கள் விடுமுறை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த 4-ந்தேதி முதல் 6-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
மேலும் பார், ஓட்டல்களில் இயங்கும் மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்த நாட்களில் தடையை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
டாஸ்மாக் கடை திறப்பு
ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 214 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு தினந்தோறும் சராசரியாக ரூ.4 கோடி வரை மதுபானம் விற்பனையாகி வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகும். 
இந்த  நிலையில் 3 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 
வழக்கமாக டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை இயங்கும். ஆனால் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு தான் கடைகள் திறக்கப்பட்டன. 3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக கடை திறந்ததுமே மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
ரூ.6 கோடிக்கு விற்பனை
அதைத்தொடர்ந்து மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. வெயில் காலம் என்பதால் பீர் விற்பனை அதிகமாக நடந்தது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் ரூ.5 கோடியே 99 லட்சத்து 48 ஆயிரத்து 950-க்கு மது விற்பனையானது. கடந்த 3-ந்தேதி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ.12 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Next Story