இளம்பிள்ளை அருகே பா.ம.க. நிர்வாகி மீது தாக்குதல்; வீடு சூறை-மாவட்ட செயலாளர் உள்பட 12 பேர் மீது வழக்கு


இளம்பிள்ளை அருகே பா.ம.க. நிர்வாகி மீது தாக்குதல்; வீடு சூறை-மாவட்ட செயலாளர் உள்பட 12 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 April 2021 3:24 AM IST (Updated: 9 April 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளை அருகே பா.ம.க. நிர்வாகி வீடு சூறையாடப்பட்டதுடன், அவரை தாக்கிய மாவட்ட செயலாளர் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இளம்பிள்ளை:
இளம்பிள்ளை அருகே பா.ம.க. நிர்வாகி வீடு சூறையாடப்பட்டதுடன், அவரை தாக்கிய மாவட்ட செயலாளர் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பா.ம.க. நிர்வாகி
இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் உமாபதி என்கிற பழனிவேல் (வயது 37). இவர் அந்த பகுதியில் சேலை மடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். 
மேலும் தாரமங்கலம் ஒன்றியம் பா.ம.க. விவசாய அணி தலைவராக இருந்து வந்தார். மேலும் உமாபதி கட்சி வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே சமீபகாலமாக கட்சி வேலையை அவரால் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
முன்விரோதம்
இது குறித்து பா.ம.க. தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரையிடம், உமாபதியின் மனைவி பானுப்பிரியா, இனிமேல் எனது கணவரை கட்சி வேலைக்கு அழைக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக உமாபதிக்கும், அண்ணாதுரைக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.50 மணி அளவில் உமாபதியின் வீட்டுக்கு பாப்பாபட்டியை சேர்ந்த பா.ம.க. தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை மற்றும் அரவிந்த், பிரகாஷ், ரஞ்சித், வினோத் உள்பட 12 பேர்  வந்தனர். அவர்கள் கையில் கட்டை, இரும்பு ராடு ஆகியவற்றுடன் வந்து உமாபதியை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் கதவை உடைத்து அவரது மனைவி பானுப்பிரியாவை கீழே தள்ளியதுடன், உமாபதியை சரமாரியாக தாக்கினர்.
12 பேர் மீது வழக்கு
மேலும் வீட்டில் இருந்த டி.வி., கட்டில், பிரிட்ஜ், வாஷிங்மிஷின், ஜன்னல், உள்பட பொருட்களை அடித்து உடைத்து வீட்டை சூறையாடினர். வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியதுடன், உமாபதிக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த உமாபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார், அண்ணாதுரை, அரவிந்த், பிரகாஷ், மணி, ரஞ்சித், வினோத், கோவிந்தராஜ், குணசேகரன், கவுதம், விஜயகுமார், விஜய், கோபி ஆகிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story