ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் பாறைகளாக காட்சியளிக்கும் ஐந்தருவி
நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் ஐந்தருவி பாறைகளாக காட்சி அளிக்கிறது.
பென்னாகரம்,
கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்குள் நுழைகிறது. பருவமழையின்போதும், கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடும்போதும் அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்ததுண்டு. அப்போது காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
பருவமழை காலங்களில் இங்குள்ள மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதை காண தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இவர்கள் தொங்கு பாலம், நடைபாதை, பார்வை கோபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள்.
பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றின் கரைகளில் குளித்து மகிழ்வார்கள். மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்று மகிழ்ந்து செல்வார்கள்.
கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. தண்ணீர் வரத்து குறைந்ததாலும், பருவமழை பொய்த்து போனதாலும் தற்போது ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 300 கனஅடிக்கு குறைவாகவே தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதனால் கரைபுரண்டு ஓடிய காவிரி ஆறு வெறும் பாறைகளாக காட்சி அளிக்கிறது. ஆர்ப்பரித்து கொட்டிய ஐந்தருவிகள் வறண்டு காணப்படுகிறது. காவிரி ஆறு குட்டையாக மாறி ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் நீரோடை போல் தண்ணீர் செல்கிறது.
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும் நாளுக்கு நாள் குறையத் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறைக்கு முன்பே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்டு குட்டை போல் காட்சி அளிப்பதை சுற்றுலா பயணிகள் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
Related Tags :
Next Story