சேலம் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி-சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு


சேலம் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு  கொலை மிரட்டல் விடுத்த ரவுடி-சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 April 2021 10:17 PM GMT (Updated: 8 April 2021 10:17 PM GMT)

சேலத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ரவுடி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சேலம்:
சேலத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ரவுடி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வக்கீல் ராஜேந்திரன். மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளராக உள்ள அவர், அதே தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் அவருக்கு ரவுடி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தேர்தலுக்கு முந்தைய நாளான கடந்த 5-ந் தேதி கன்னங்குறிச்சியை சேர்ந்த ரவுடி ஒருவரின் தலைமையில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களுக்கு டோக்கன் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க.வினர் அங்கு சென்று தட்டிகேட்டதால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கன்னங்குறிச்சி போலீசார் அங்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
ரவுடி பேசும் ஆடியோ
இந்தநிலையில், சம்பந்தப்பட்ட ரவுடி, அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் ரவுடி பேசும்போது, நான் குண்டாசில் கைதாகும் நிலை ஏற்பட்டபோது, அ.தி.மு.க. வினர் தான் போலீசில் பேசி காப்பாற்றினர். இதற்காக தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறேன். 
என்னை, 10 நாட்களுக்கு பிறகு எங்கே போவாய் என சிலர் கேட்கின்றனர். 5 ஆண்டுகள் ஆனாலும் இங்கே தான் இருப்பேன். இப்பகுதியில் உள்ள தி.மு.க.வினர் யாரையும் விடமுடியாது. இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் என்று பேசியுள்ளார்.
அதற்கு எதிர்முனையில் பேசும் நபர், அப்படியானால், யாரை போடப்போகிறாய் என்று கேள்வி கேட்கிறார். இவ்வாறு தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி, மற்றொரு நபர் பேசும் ஆடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
போலீசார் ஆலோசனை
இதனிைடயே, தேர்தல் அன்று ஓட்டுப்போட வந்த வக்கீல் ராஜேந்திரன், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். 
ஆனால் எம்.எல்.ஏ.வுக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்த ரவுடி யார்? அவரை கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யலாமா? வேண்டாமா? என்று போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Next Story