சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 12 அலுவலர்கள் நியமனம்-ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்


சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 12 அலுவலர்கள் நியமனம்-ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 9 April 2021 4:37 AM IST (Updated: 9 April 2021 4:37 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 12 கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 12 கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பேசியதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ளும் வகையில் சுகாதார அலுவலர்களின் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க 12 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு அலுவலர்கள்
இக்கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில், நோய் அறிகுறி உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி, காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், சளி தடவல் மாதிரி சேகரிப்பு முகாம்கள், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், அவர்கள் சிகிச்சை பெறும் விவரங்கள், 3 நபர்களுக்கு மேல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தொடர்பில் உள்ளவர்களை தனிமைப்படுத்துதல் ஆகிய சுகாதார அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்வர்.
நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள தெருக்களில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்களை அமைத்து கண்காணிக்கும் பணிகளையும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும், 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளையும் கண்காணிப்பு அலுவலர்கள் மேற்கொள்வர்.
விழிப்புணர்வு
அனைத்து கண்காணிப்பு அலுவலர்களும், சுகாதார அலுவலர்களின் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணித்து கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி கொரோனா நோய் தொற்று பாதிப்பில்லா மாநகரமாக சேலம் மாநகரம் திகழ கண்காணிப்பு அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், செயற்பொறியாளர்கள் லலிதா, பழனிசாமி, உதவி ஆணையாளர்கள் மருதபாபு, சாந்தி, சரவணன், ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், சிபிசக்ரவர்த்தி, திலகா, செல்வராஜ் மற்றும் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story