வத்தலக்குண்டுவில், குடோனில் பதுக்கிய 5,300 லிட்டர் ரேஷன் கடை பாமாயில் பாக்கெட்டுகள் பறிமுதல் வியாபாரி கைது


வத்தலக்குண்டுவில், குடோனில் பதுக்கிய 5,300 லிட்டர் ரேஷன் கடை பாமாயில் பாக்கெட்டுகள் பறிமுதல் வியாபாரி கைது
x
தினத்தந்தி 9 April 2021 4:58 PM IST (Updated: 9 April 2021 4:59 PM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டுவில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 ஆயிரத்து 300 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வியாபாரி கைது செய்யப்பட்டார்.


வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு  பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நாகூர்மைதீன் (வயது 45). எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் வத்தலக்குண்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சில ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் பாமாயில் பாக்கெட்டுகளை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை உடைத்து டின்னில் ஊற்றி சமையல் எண்ணெய் போல விற்று வந்ததாக கூறப்படுகிறது. 
இவ்வாறு ரேஷன் கடைகளில் வாங்கும் பாமாயில் பாக்கெட்டுகளை வத்தலக்குண்டு தெற்கு தெருவில் உள்ள ஒரு  குடோனில் அவர் பதுக்கி வைத்திருந்தார். 
பறிமுதல்
இதுபற்றி வத்தலக்குண்டு போலீசாருக்கு ரகசியதகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று குடோனில் இருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அந்த சாக்குமூட்டைகளில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகிக்க அரசால் வழங்கப்படும் 5ஆயிரத்து 300 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து அவற்ைற போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் ஆகும். 
இதைத்தொடர்ந்து நாகூர்மைதீனையும், பாமாயில் பாக்கெட்டுகளையும் உணவு பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் வத்தலக்குண்டு போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து நாகூர்மைதீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


Next Story