அரக்கோணம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் 6 பேர் கைது< பதற்றம் நீடிப்பு


அரக்கோணம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் 6 பேர் கைது< பதற்றம் நீடிப்பு
x
தினத்தந்தி 9 April 2021 8:15 PM IST (Updated: 9 April 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

அரக்கோணம்

இரட்டை கொலை

அரக்கோணம் அருகே உள்ள சித்தம்பாடி பகுதியில் கடந்த 7-ந் தேதி இரவு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சோகனூர் பகுதியை சேர்ந்த அர்ஜூன் (வயது 20), செம்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா (25) ஆகிய 2 வாலிபர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். மதன், சவுந்தர்ராஜன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து அர்ஜூன், சூர்யா ஆகியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து 2 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், அப்போது தான் சாலைமறியல் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர்.
சாலை மறியல்

பக்கத்து கிராமமான பெருமாள்ராஜ பேட்டையை சேர்ந்த ராஜவேலு என்பவருக்கு சொந்தமான நிலத்தில்‌ அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த நெற்குவியல் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் நெற்குவியல் மற்றும் டிராக்டர் தீயில் கருகி நாசமாகியது.

சாலை மறியல், தீ வைப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின்பேரில், அந்தப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

6 பேர் கைது

கொலை தொடர்பாக அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கொலை நடந்தது தெரிய வந்தது. 

இந்த வழக்கு தொடர்பாக பெருமாள் ராஜபேட்டையை சேர்ந்த புலி என்ற சுரேந்திரன் (19), அஜித் (24), மதன்‌ (37), நந்தகுமார் (20), சத்யா (24), சாலை பகுதியை சேர்ந்த கார்த்திக் (20) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து மீதமுள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பதற்றம் நீடிப்பு

இந்த நிலையில், நேற்றும் 3 -வது நாளாக சாலைமறியல் போராட்டம் தொடர்ந்தது. அர்ஜூன், சூர்யா ஆகிய 2 பேரின் உடல்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் இருவரின் உடல்களையும் உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் வருவாய்த் துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

Next Story