கொரோனா பரவலை தடுக்க வேலூர் நேதாஜி மார்க்கெட்டை மூட நடவடிக்கை - சில்லரை கடைகள் வேறு இடத்துக்கு மாற்றம்


கொரோனா பரவலை தடுக்க வேலூர் நேதாஜி மார்க்கெட்டை மூட நடவடிக்கை - சில்லரை கடைகள் வேறு இடத்துக்கு மாற்றம்
x
தினத்தந்தி 9 April 2021 3:54 PM GMT (Updated: 9 April 2021 3:59 PM GMT)

கொரோனா பரவலை தடுக்க நேதாஜி மார்க்கெட் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 200 பேருக்கு ஒருவர் வீதம் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் 100 பேருக்கு 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஒரே மாதத்தில் பாதிப்பு உயர்வு மிகவும் அதிகரித்துள்ளது.
பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 7 சதவீதம் ஆகும். மாவட்ட மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி கொரோனா பரிசோதனை செய்வது பயனற்றது. எனவே அதற்கு மாறாக தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

மார்க்கெட் மூலமாக கொரோனா பரவுவதை தடுக்க வேலூர் நேதாஜி மார்க்கெட் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேதாஜி மார்க்கெட்டில் சில்லரை வணிக காய்கறி கடைகள் மாங்காய் மண்டி மைதானத்திற்கும், பூக்கடைகள் ஊரீசு பள்ளி மைதானத்துக்கும் மாற்றப்படும். மேலும் மொத்த வணிக கடைகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை செயல்படும். மாங்காய் மண்டியில் கடைகள் அமைப்பதற்கான ‘ஷெட்' பணிகள் தொடங்கப்பட உள்ளது.

பொதுமக்களுக்கு முககவசம் அணிவது குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகளுக்கு வரும் பொது மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என கடை உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும்.

முதல்கட்டமாக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் இந்த நிறுவனம், வணிகவளாகங்கள் அல்லது கடைகளில் பணிபுரிபவர்கள் தடுப்பூசி போடப்படவில்லை என்றால் அந்த நிறுவனம், வணிக வளாகங்கள் அல்லது கடைகள் மூடி ‘சீல்’ வைக்கப்படும். யாருக்கும் விதிவிலக்கல்ல.

மக்களுடன் அதிக தொடர்பு இருக்கக்கூடிய பஸ் கண்டக்டர்கள் மற்றும் வங்கிகள் போன்ற அலுவலங்கள், ஓட்டல் போன்றவற்றில் 45 வயதுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்கள் தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும். கொரோனா அதிகரித்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய படுக்கை வசதிகள் இல்லை. எனவே வரும் மாதங்களில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பஸ்சில் நின்றுக்கொண்டு யாரும் பயணம் செய்யக்கூடாது. இதை தனியார் பஸ் உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும். வட்டாரப்போக்குவரத்து அலுவலர் இதுகுறித்து ஆய்வு செய்து அதிக பயணிகள் பயணம் செய்தால் நடவடிக்கை எடுப்பார். 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் மறுபடியும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story