விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தப்பாட்டம் மூலம் பயணிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு


விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தப்பாட்டம் மூலம் பயணிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 9 April 2021 9:29 PM IST (Updated: 9 April 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தப்பாட்டம் மூலம் பயணிகளுக்கு, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா 2-வது அலை உருவாகிறதா என்று பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்நோய் பரவலை முற்றிலும் தடுக்க தமிழக அரசு, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை மேலாளர் ராமகிருஷ்ணன் அறிவுரைப்படி நேற்று காலை விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் கொரோனா நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தப்பாட்டம் மூலம் விழிப்புணர்வு

ரெயில் நிலைய 4, 5-வது நடைமேடைகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் பெருமாள், சகாயராஜ் மற்றும் ரெயில்வே போலீசார் முன்னிலை வகித்தனர். இதில் தப்பாட்ட குழுவினர் மூலம் ரெயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது ரெயில் பயணத்தின்போது பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், அவ்வப்போது சானிடைசரால் கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும், முக்கியமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தப்பாட்டம் மூலம் ரெயில் பயணிகளுக்கு கொரோனா தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

Next Story