உத்தமபாளையம் அருகே சொத்து தகராறில் வாலிபரை வெட்டி கொன்ற தந்தை


உத்தமபாளையம் அருகே சொத்து தகராறில் வாலிபரை வெட்டி கொன்ற தந்தை
x
தினத்தந்தி 9 April 2021 9:40 PM IST (Updated: 9 April 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே சொத்து தகராறில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே சொத்து தகராறில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். 
சொத்து தகராறு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மர் (வயது 56). இவரது மகன் கார்த்திக் (33). இவருக்கு பிரவீணா (27) என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கார்த்திக், தனது தந்தை பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி வற்புறுத்தினார். ஆனால் அதற்கு தர்மர் மறுப்பு தெரிவித்தார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
வெட்டி கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தர்மருக்கும், கார்த்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்திக், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தர்மரை வெட்ட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட அவர், தனது மகனின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கினார். பின்னர் தர்மர், மகன் என்றும் பாராமல் கார்த்திக்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். 
இதில் படுகாயம் அடைந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மரை கைது செய்தனர். 
மகனை தந்தையே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் ஆனைமலையன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story