கொரோனா சிகிச்சை மையமாக இளைஞர் விடுதி மாற்றம்


கொரோனா சிகிச்சை மையமாக இளைஞர் விடுதி மாற்றம்
x
தினத்தந்தி 9 April 2021 10:35 PM IST (Updated: 9 April 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், கொரோனா சிகிச்சை மையமாக இளைஞர் விடுதி மாற்றப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. அப்போது தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவிட் கேர் சென்டர்கள் அதிகரிக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைந்ததால் அந்த மையங்கள் செயல்படவில்லை. 

இதற்கிடையே நீலகிரியில் கடந்த சில நாட்களாக தினமும் 25 முதல் 30 பேருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் உறுதியாகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, குன்னூர் அரசு லாலி மருத்துவமனை, கூடலூர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதுமான படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

தற்போது நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊட்டி இளைஞர் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்குள்ள அறைகள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் படுக்கைகள், கம்பளிகள் போடப்பட்டு, 70 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. 
அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதியான நபர்கள் இந்த மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

நீலகிரியில் கொரோனா அதிகரித்து வருவதால் கோவிட் கேர் சென்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

முன்னதாக செயல்பட்டு வந்த மையங்களை மீண்டும் மையமாக மாற்ற ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் கோரப்படுகிறது. கொரோனா உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 300 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. 

தொற்று பரவலை தடுக்க பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை 3 லட்சத்து 96 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 82 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

Next Story