வடமாநில வாலிபரை கட்டி வைத்த பொதுமக்கள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள திம்பட்டியில் இருந்து எம்.கைகாட்டிக்கு செல்லும் சாலையில் சந்தேகப்படும்படியாக ஒரு வடமாநில வாலிபர் சுற்றித்திரிந்தார். மேலும் அவர் அந்த வழியாக சென்ற சிறுமியை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
கோத்தகிரி,
உடனே அவரை பொதுமக்கள் பிடித்து, கயிற்றால் கட்டி வைத்தனர். அப்போது அவர் தன்னை போலவே தமிழகத்தில் 400 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பல் நுழைந்து உள்ளதாக இந்தியில் கூறியதாக தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் இல்லை என்பதும், குடிபோதையில் அவ்வாறு உளறியதும் தெரியவந்தது.
பின்னர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை போலீசார் பெற்றுக்கொண்டு எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர். அந்த வாலிபர், அரவேனு அருகே தும்பூர் கிராமத்திலும் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு அறிமுகம் இல்லாத நபர்கள் ஊருக்குள் வருவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக கிராம மக்கள் கூறினர்.இதற்கிடையில் அந்த வாலிபரை கட்டி வைத்து பொதுமக்கள் விசாரிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story