வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை கலெக்டர் ஆய்வு
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைகல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்:
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைகல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைகல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையினையும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பு
பாதுகாப்பு அறைக்கு இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு வளாகம், பாதுகாப்பு அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் ஒரு சட்டசபை தொகுதிக்கு 1 துணை தாசில்தார் நிலையிலான அலுவலர் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் 4 அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடையில்லா மின்சாரம்
வேட்பாளர்களின் பிரதிநிதிகள் 24 மணிநேரமும் பார்வையிடுவதற்கு ஏதுவாக கல்லூரி வளாகத்தில் தொலைக்காட்சி வசதியுடன் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்னாக்கி அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருத்துறைப்பூண்டி கீதா, திருவாரூர் பாலசந்திரன், நன்னிலம் பானுகோபன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story