பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்- திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் பேட்டி
பயணிகளின் வசதிக்காக படிப்படியாக கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் கூறினார்.
திருச்சி,
பயணிகளின் வசதிக்காக படிப்படியாக கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் கூறினார்.
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக ஊடகங்களில் வீடியோ
ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருவதாக சமூக ஊடகங்களில் பழைய வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். இதுபோன்ற பழைய வீடியோக்களை தற்போது உள்ளதுபோல் யாரும் பகிர வேண்டாம்.
கொரோனா பரவலை தடுத்திடும் வகையில், திருச்சி கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரேயொரு பாதை மட்டும் திறக்கப்பட்டு பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தானியங்கி கருவி மூலம் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. பயணிகள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. ரெயிலில் பயணம் செய்யும்போதும் பயணிகள் தவறாமல் முககவசம் அணிய வேண்டும்.
கூடுதல் ரெயில்கள்
கொரோனா நோய் தொற்று காலத்தில் ரெயில் நிலையத்துக்கு பயணிகளை வழியனுப்ப வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 1000 டிக்கெட் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது 100 டிக்கெட்கள் மட்டுமே விற்பனையாகிறது. பயணிகளின் வசதிக்காக படிப்படியாக கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story