வெப்ப அயற்சி, அதிர்ச்சி எதிரொலி: கோழிகளுக்கு காலை முதல் மாலை வரை குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்
வெப்ப அயற்சி, அதிர்ச்சி எதிரொலி: கோழிகளுக்கு காலை முதல் மாலை வரை குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல்:
வெப்ப அயற்சி மற்றும் வெப்ப அதிர்ச்சி எதிரொலியாக கோழிகளுக்கு காலை முதல் மாலை வரை குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
வானிலை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. அடுத்த 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும் இருக்கும்.
அதிக வெப்ப அளவு
பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் அதிக அளவில் காணப்படும். அதனால் வெப்ப அயற்சியும், வெப்ப அதிர்ச்சியும் கோழிகளுக்கு இருக்கும். இதன் எதிரொலியாக கோழிகள் இறக்க வாய்ப்பு உள்ளது. எனவே கோழிகள் தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்கிறதா? என்பதை கண்காணித்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தீவனம் ஏதும் அளிக்காமல் குளிர்ந்த நீர் மட்டும் கொடுத்து வர வேண்டும். பகலில் எடுக்க வேண்டிய தீவனத்தை வெப்பம் குறைவான இரவு நேரத்தில் 2 மணி நேரம் செயற்கை ஒளி கொடுத்து ஈடுகட்ட வேண்டும். அதன் மூலம் முட்டை குறைபாட்டை குறைக்கலாம்.
கடந்த வாரம் இறந்த கோழிகள் வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். வெப்ப அயற்சி மற்றும் நோய் தாக்கத்தை குறைக்க தீவனத்தில் சமையல் சோடா, வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கலவையை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
========
Related Tags :
Next Story