ஆத்தூர், கெங்கவல்லி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு


ஆத்தூர், கெங்கவல்லி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு
x
தினத்தந்தி 9 April 2021 10:30 PM GMT (Updated: 9 April 2021 10:30 PM GMT)

ஆத்தூர், கெங்கவல்லி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு நடத்தினார்.

தலைவாசல்:
ஆத்தூர், கெங்கவல்லி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு நடத்தினார்.
வாக்கு எண்ணும் மையம்
கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இங்குள்ள அறைகளில் 2 தொகுதிகளின் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றிலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் மாருதி பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதா? உயர் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கிறதா ? கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பொருத்தப்பட்டுள்ளதா? 3 அடுக்கு பாதுகாப்பு முறையாக போடப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். 
அப்போது அவர் அங்கு பணியில் இருந்த போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணுவதற்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஆத்தூர் உதவி கலெக்டர் துரை, தாசில்தார்கள் அன்புசெழியன், வெங்கடேசன், வரதராஜன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் இம்மானுேவல் ஞானசேகர், வேலுமணி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story