ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட சாய-சலவை பட்டறைகளில் ஆர்.டி.ஓ. ஆய்வு


ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட சாய-சலவை பட்டறைகளில் ஆர்.டி.ஓ. ஆய்வு
x
தினத்தந்தி 10 April 2021 4:14 AM IST (Updated: 10 April 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட சாய மற்றும் சலவை பட்டறைகளில் ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் ஆய்வு செய்தார்.

ஈரோடு
ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட சாய மற்றும் சலவை பட்டறைகளில் ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் ஆய்வு செய்தார்.
பட்டறைகளுக்கு சீல்
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மணக்காடு, குப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சாய மற்றும் சலவை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் குழாய்கள் நிலத்தடியில் பதிக்கப்பட்டு காலிங்கராயன் வாய்க்காலில் நேரடியாக கலக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 30 பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காலிங்கராயன் வாய்க்காலில் கலந்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட 30 சாய மற்றும் சலவை பட்டறைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆய்வு
இதனால் சீல் வைக்கப்பட்ட பட்டறைகளின் உரிமையாளர்கள் தொடர்ந்து பட்டறைகளை இயக்க அனுமதி வழங்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுபடி, சாய மற்றும் சலவை பட்டறைகளில் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் சீல் வைக்கப்பட்ட பட்டறைகளில் முறையாக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதா? என்றும் நிலத்தடியில் போடப்பட்டிருந்த குழாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதா? என்றும் ஆய்வு செய்தார்.
கோர்ட்டில் தாக்கல்
இந்த ஆய்வறிக்கையை அவர் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சாயம் மற்றும் சலவை பட்டறைகளை மீண்டும் இயக்கலாமா என்பது குறித்து கோர்ட்டு தான் முடிவு செய்யும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘சீல் வைக்கப்பட்ட பட்டறைகளை மீண்டும் இயக்க அனுமதி அளித்தால் எங்கள் பகுதியில் நீர் நிலைகள் மாசுபட வாய்ப்பு உள்ளது. எனவே சீல் வைக்கப்பட்ட ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கக்கூடாது' என்றனர்.

Next Story