கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீன் மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை செயல்பட தடை- மாநகராட்சி ஆணையாளர் தகவல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்று (சனிக்கிழமை) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் நேற்று மாநகராட்சி கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் பேசியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இனி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இறைச்சி கடைகள் வழக்கம் போல் செயல்படும். இறைச்சிகளை பாக்கெட் செய்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
சீல்
தேனீர் கடைகளில் ஒரு முறை உபயோகிக்கும் பேப்பர் கப் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 50 சதவீதம் இருக்கைக்கு மட்டும் அனுமதி. கொரோனா தடுப்பூசி போட 50-க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்தால் அவர்களின் வீட்டுக்கே வந்து மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போடப்படும். கொரோனா விதிமுறைகளை மீறினால் முதல் முறை அபராதம் விதிக்கப்படும், 2-வது முறை சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
முக கவசம் அணியாதவர்களுக்கு இதுவரை ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது அபராத தொகை உயர்த்தப்பட்டு இனி முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் இருந்து ரூ.200 வசூலிக்கப்படும்.
அபராதம்
மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500-ம், சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூ.500-ம், வணிக நிறுவனங்கள், வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக புதிய உத்தரவு அரசிடம் இருந்து வந்துள்ளது. வணிக நிறுவனங்களுக்கு வந்து செல்பவர்களின் செல்போன் எண், பெயர் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
ஒரே தெருவில் 3 வீடுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அடைக்கப்படும். அந்தப் பகுதிகளுக்கு வெளி நபர்கள் செல்லவும், அந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் பேசினார்.
கூட்டத்தில் வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், ஜவுளி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story