கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்- கலெக்டர் கதிரவன் வேண்டுகோள்


கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்- கலெக்டர் கதிரவன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 April 2021 10:50 PM GMT (Updated: 9 April 2021 10:50 PM GMT)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஈரோடு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
உருமாறிய கொரோனா
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம், அண்டை மற்றும் வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும், வருகிற 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தொற்று அதிகரிப்பு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முக கவசம் அணிவதையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். முக கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது.
சமூக இடைவெளி
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பஸ்களில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தால் மட்டுமே நோய்த்தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஆய்வு
மேலும் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி நேற்று பெருந்துறை மற்றும் கொடுமுடி தாலுகா பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள் மற்றும் பஸ்களில் ஆய்வு மேற்கொண்டு, முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பவானி போலீஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் அருகில் இயங்கி வரும் பேக்கரி, மளிகை கடை, பர்னிச்சர் கடை, உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் முக்கிய சாலைகளில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story