மேச்சேரி அருகே மின்வாரிய ஊழியர் வெட்டிக்கொலை-உறவினர்கள் சாலை மறியல்
மேச்சேரி அருகே மின்வாரிய ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேச்சேரி:
மேச்சேரி அருகே மின்வாரிய ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மின் வாரிய ஊழியர்
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி ஊராட்சி நல்லியண்ணன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56). இவர் சேலம் உடையாப்பட்டி மின்வாரிய மின் தொடர் கட்டுமான அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், தமிழ்ச்செல்வி என்ற மகளும், செல்வகுமார், கலையரசன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
செல்வகுமார், அதே பகுதியில் உள்ள நொரச்சிவளவை சேர்ந்த தமிழ்நிதி என்பவரின் மகள் சவுந்தர்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனிடையே அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சவுந்தர்யா, ஒரு அறையில் கதவை பூட்டிக்கொண்டு செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார்.
அரிவாளால் வெட்டினர்
இதை செல்வகுமாரின் தாயார் பானுமதி கேட்டுள்ளார். அப்போது சவுந்தர்யா மாமியாரை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. பின்பு சவுந்தர்யா தனது தந்தை தமிழ்நிதிக்கு போனில் தகவல் சொல்லி வரவழைத்துள்ளார். இதையடுத்து அவரது தந்தை தமிழ்நிதி, தாயார் சித்ரா, அண்ணன் பிரசாந்த், தம்பி கோகுல் ஆகிய 4 பேரும் கோவிந்தன் வீட்டுக்கு வந்து தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழ்நிதி, சித்ரா, பிரசாந்த், கோகுல் ஆகிய 4 பேரும் சேர்ந்து கோவிந்தனை தாக்கியதுடன் அரிவாள், மண்வெட்டியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தனை உறவினர்கள் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொலை வழக்கு
இதுகுறித்த புகாரின் பேரில் தமிழ்நிதி, சித்ரா, பிரசாந்த், கோகுல் ஆகியோர் மீது மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தமிழ்நிதி உள்பட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலை மறியல்
இதனிடையே கோவிந்தன் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள் மேச்சேரி பஸ் நிலையத்தில் கோவிந்தன் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனத்துடன், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், மேச்சேரி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் மேச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
Related Tags :
Next Story