டாஸ்மாக் பாரில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை


டாஸ்மாக் பாரில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 10 April 2021 4:50 AM GMT (Updated: 10 April 2021 4:50 AM GMT)

டாஸ்மாக் பாரில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

பிணமாக கிடந்தார்

சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம் செகரட்ரியேட் காலனி அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு ஆண் பிணம் கிடப்பது உறுதியானது.

பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவரின் சட்டை பையில் இருந்த செல்போனை ஆய்வு செய்தபோது இறந்து கிடந்தவர், புழல் லட்சுமிபுரம் வெங்கடேஸ்வரா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த அன்பழகன் (வயது 52) என்பதும், சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது.

அடித்துக்கொலை

மேலும் விசாரணையில், புழல் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் அன்பழகன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது புழல் லட்சுமிபுரம் அசோகா தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (36) மற்றும் அவரது நண்பரும் அதே பாரில் மது அருந்த வந்தனர். அப்போது இவர்களுக்கும், அன்பழகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதன்பிறகு அன்பழகன், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது நண்பர் இருவரும் அவரை பின்தொடர்ந்து விரட்டிச்சென்று விநாயகபுரம் செகரட்ரியேட் காலனி அருகே அன்பழகனை மறித்து சரமாரியாக அடித்துக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது

இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story