சில்லரை காய்கறி கடைகள் செயல்பட தடைவிதித்ததற்கு எதிர்ப்பு: கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்
கொரோனா பரவல் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை காய்கறி கடைகள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வியாபாரிகள் நேற்று மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சில்லரை காய்கறி கடைகளுக்கு தடை
கொரோனா நோய்த்தொற்று கடந்த ஆண்டில் வேகமாக பரவியதற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டும் ஒரு காரணமாக பேசப்பட்டது. அந்தவகையில் பலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருந்தது.இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.அதில், கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கறி கடைகள் மட்டும் இன்று (சனிக்கிழமை) முதல் செயல்பட தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோயம்பேடு சில்லரை காய்கறி கடை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
வியாபாரிகள் போராட்டம்
ஏற்கனவே நோய்த்தொற்று காலத்தில் கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியாபார காய்கறி கடைகள் மூடப்பட்டு இருந்தன. வாழ்வாதாரம் இன்றி தவித்த அந்த வியாபாரிகள் பல கோரிக்கை மனுக்களை அளித்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் கடைகளை திறந்தனர்.மூடப்பட்டு இருந்த கடைகளை திறந்து, கடந்த 120 நாட்களுக்கு மேலாக வியாபாரத்தை மேற்கொண்டு, தற்போது தான் ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்ததாகவும், மீண்டும் இப்போது கடைகளை மூட சொல்லி அரசு கூறி இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் வியாபாரிகள் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.இதனை
எதிர்க்கும் வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேர் எதிரே இருக்கும் அரசின் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு சில்லரை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்தகட்ட முடிவு
இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு முதன்மை அதிகாரி கோவிந்தராஜ் வியாபாரிகளிடம் கூறுகையில், ‘நாளையும் (அதாவது இன்று சனிக்கிழமை), திங்கட்கிழமையும் சுழற்சி முறையில் கடைகளை திறந்து கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய தலைமை செயலாளர் தற்போது டெல்லியில் இருப்பதால், அவருடன் ஆலோசித்த பிறகுதான் அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியும்' என்றார். ஆனால் வியாபாரிகள் தடையை மொத்தமாக விலக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
தீக்குளிப்பேன்
10 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும், பெண் வியாபாரி நாகவள்ளி:-
எங்கள் கடையை மூடிவிட்டு சாப்பாட்டுக்கு நாங்கள் எங்கே போவது?. கடையை மூடச்சொல்லும் அரசு அதற்கேற்ற உதவித்தொகையாக மாதம் ரூ.15 ஆயிரம் தந்தால், நாங்கள் அதற்கு கட்டுப்படுகிறோம்.அப்படி எதுவும் செய்யாமல், கடைகளை மூடச்சொன்னால் நான் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிப்பேன். அதை செய்தால்தான் இந்த அரசு செவிசாய்க்குமா?.
துயரமான விஷயம்
வியாபாரி ஜோதிராஜ்:-இது எங்களுடைய வாழ்வாதார பிரச்சினை. எனவே கடைகளை திறந்து வியாபாரம் தொடர வேண்டும். பழைய வியாபாரம் எதுவும் இல்லை. கூட்டம் கூட்டமாக முன்பு போல மக்கள் வருவதில்லை.
ஏற்கனவே கடையை மூடி மீண்டும் திறந்தபோது, நகையை அடகு வைத்து, பைனான்சியரிடம் பணம் பெற்றுத்தான் தவழ்ந்து எழுந்தோம். மீண்டும் கடையை மூடச்சொன்னால், என்ன நியாயம்?.
Related Tags :
Next Story