தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தகவல்
தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அரசின் முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அரசின் முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்தார்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட கணேஷ்நகர், முள்ளக்காடு ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணியையும், தற்காலிகமாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ள தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியையும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் (கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள்) குமார் ஜெயந்த், நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பஸ்கள்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள வேண்டும்.
உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர். கேளிக்கை விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், நகர பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
தடுப்பு நடவடிக்கைகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஷரண்யாஅரி, உதவி கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் உடன் இருந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனா் போஸ்கோராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரன், மாநகர நகர்நல அலுவலர் வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story