புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன


புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
x
தினத்தந்தி 10 April 2021 8:35 PM IST (Updated: 10 April 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோய் பரவலை தடுக்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்களில் 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

விழுப்புரம், 

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் மீண்டும் கொரோனா 2-வது அலை உருவாகிறதா? என்று பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. 
இந்நோய் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் அமல்

அதுமட்டுமின்றி கொரோனா தொற்று பழையபடி மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் அதனை தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், சில புதிய கட்டுப்பாடுகளுடனும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அரசு விதித்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முதல் கோவில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற இருந்த லட்ச தீப திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதியளிக்கப்படும். அதுபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் நடைபெற இருந்த திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஸ்களில் அமர்ந்து செல்லவே அனுமதி

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதோடு அவர்கள் முக கவசம் அணிந்தபடியும், அவ்வப்போது சானிடைசர் திரவத்தை பயன்படுத்தி கைகளை நன்கு சுத்தமாக கழுவியும் பணி செய்தனர்.
மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களை பொறுத்தவரை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஸ்களில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பஸ்களில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி மறுத்தும் அரசு உத்தரவிட்டுள்ளதால் அந்த நடைமுறைகள் பஸ்களில் கடைபிடிக்கப்பட்டது. விழுப்புரம், செஞ்சி, விக்கிரவாண்டி, வானூர், மேல்மலையனூர், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் உள்ளிட்ட இடங்களில் பஸ்களில் பயணம் செய்ய வந்த பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்த பின்னரே பஸ்களில் பயணிக்க டிரைவர்கள், கண்டக்டர்கள் அனுமதித்தனர். அதோடு பஸ்களில் ஏறுவதற்கு முன்பாக பயணிகள் அனைவரும் சானிடைசர் திரவம் கொடுத்து அதை பயன்படுத்த வைத்து அதன் பிறகே பஸ்சிற்குள் ஏற்றினர். பஸ்சின் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்யும் அளவிற்கே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இடநெருக்கடியில் நெருக்கமாக நின்றுகொண்டு செல்ல பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

50 சதவீத பேர் மட்டுமே அனுமதி

இந்த நெறிமுறைகள் அனைத்து பஸ்களிலும் கடைபிடிக்கப்பட்டாலும் பெரும்பாலான பஸ்களில் இருக்கைகள் காலியாகவே இருந்தன. பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. வாடகை கார்களை பொறுத்தவரை டிரைவரை தவிர்த்து 3 பயணிகள் மட்டுமே பயணிக்கவும், ஆட்டோக்களில் டிரைவரை தவிர்த்து 2 பயணிகள் மட்டுமே பயணிக்கும் நடைமுறைகள் அமலுக்கு வந்தது.
அதுபோல் காய்கறி கடைகள், மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் வசதிக்காக சானிடைசர் திரவத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச்சென்றனர். கடைகளுக்கு முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே பொருட்களும் வழங்கப்பட்டது. வணிக வளாகங்கள், நகை கடைகள், ஜவுளி கடைகளும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்கியது.

ஓட்டல்கள்

இதேபோல் ஓட்டல்கள், டீக்கடைகளில் மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர வைக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கேற்ப ஒரு மேஜையில் 4 இருக்கைகள் இருந்த இடத்திற்கு பதிலாக 2 இருக்கைகளை அகற்றிவிட்டு எதிரெதிரே 2 இருக்கைகள் போடப்பட்டு பொதுமக்கள் அமர்ந்து உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓட்டலுக்கு உணவு சாப்பிட வந்த அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் சானிடைசர் திரவம் கொடுத்து அதை பயன்படுத்திய பிறகே ஓட்டலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இரவு 11 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதிக்கப்பட்டது.
மேலும் பொழுதுபோக்கு பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள பூங்காக்களில் 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாமல் வந்தவர்களை பூங்காவினுள் அனுமதிக்கப்படவில்லை.

சினிமா தியேட்டர்கள்

சினிமா தியேட்டர்களை பொறுத்தவரை 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால் அனைத்து தியேட்டர்களிலும் ஒரு இருக்கைக்கு அடுத்தாற்போல் உள்ள இருக்கையில் பொதுமக்கள் அமராமல் இருக்க அடையாள குறியீடுகள் போடப்பட்டிருந்தன. சில தியேட்டர்களில் 2 இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் கயிறு கட்டியும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. தியேட்டர்களில் ஒவ்வொரு சினிமா படக்காட்சி முடிந்ததும் தியேட்டர் அறை மற்றும் வளாகம் முழுவதும் கிருமி நாசினியால் நன்கு சுத்தம் செய்யப்பட்ட பின்னரே அடுத்த படக்காட்சிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பெட்ரோல் நிலையங்கள்

பெட்ரோல் நிலையங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முக கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அதற்கான அறிவிப்பு பலகை ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களிலும் வைக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் முக கவசம் அணிந்து வந்தவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல்- டீசல் நிரப்பப்பட்டது. வாகன ஓட்டிகள் சமூக இடைவெளியை பின்பற்றி தங்கள் வாகனங்களில் பெட்ரோல்- டீசலை நிரப்பிச்சென்றனர். முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாமல் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

அரசு விதித்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதையடுத்து பஸ் நிலையம், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள், பெட்ரோல் நிலையங்களில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story