விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி


விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 April 2021 9:32 PM IST (Updated: 10 April 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

தனித்தனி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அண்ணாமலை நகர்

சிதம்பரம் அடுத்த கிள்ளை அருகே உள்ள எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மகன் புகழேந்தி (வயது 20). இவர் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். 
இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு, கிள்ளை சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து பிச்சாவரம் சாலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

எம்.ஜி.ஆர். நகர் சோதனை சாவடி அருகே வந்த போது, புகழேந்தியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த புகழேந்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே புகழேந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கண்டக்டர்

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கீழப்பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் ரஞ்சித்குமார் (25). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், விருத்தாசலம் பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தாட்சாயினி. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. 
இவர் நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் பணியை முடித்துக்கொண்டு, விருத்தாசலத்தில் இருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். விருத்தாசலம் புறவழிச்சாலையில் பொன்னேரிக்கும், சித்தலூருக்கும் இடையே வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி அருகிலுள்ள வாழை தோட்டத்திற்குள் மோட்டார் சைக்கிள் புகுந்தது, இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமார் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டு இறந்தாரா? அல்லது அந்த வழியாக சென்ற வாகனத்தில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story