டேன்டீ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி டேன்டீ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூடலூர்
காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி டேன்டீ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காட்டுயானைகள் அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலா மற்றும் பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட கழகத்தின்(டேன்டீ) ரேஞ்ச்-4 உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகிறது.
குறிப்பாக தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டு சேதப்படுத்தி வருகிறது. மேலும் விவசாய பயிர்களையும் நாசம் செய்து வருகிறது. சமீபத்தில் அதே பகுதியை சேர்ந்த முருகையா உள்பட சில தொழிலாளர்களின் வீடுகளை காட்டுயானைகள் சூறையாடின.
தூங்காமல் தவித்த தொழிலாளர்கள்
இதற்கிடையில் நேற்று முன்தினம் தேவாலா மற்றும் பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட கழகத்தின் ரேஞ்ச்-4 பகுதிக்குள் 2 காட்டுயானைகள் மீண்டும் புகுந்தன. தொடர்ந்து ஏற்கனவே சேதப்படுத்திய தொழிலாளர்களின் வீடுகளை மீண்டும் சேதப்படுத்தின.
இதனால் அச்சமடைந்த தொழிலாளர் குடும்பத்தினர் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். நேற்று அதிகாலை வரை விடிய, விடிய அப்பகுதியில் வீடுகளை முற்றுகையிட்டு இருந்த காட்டு யானைகள், அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றன. அதன் பின்னர் தொழிலாளர் குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
வேலை நிறுத்தம்
இந்த நிலையில் அரசு தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் வந்தனர். அப்போது காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர், டேன்டீ நடத்துனர் ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தொழிலாளர் தரப்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க
முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என்று வனத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று காலை 11 மணிக்கு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு சென்றனர்.
Related Tags :
Next Story