தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 156 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 156 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 April 2021 1:01 AM IST (Updated: 11 April 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 156 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெரம்பலூரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட தலைமை நீதிபதி சுபாதேவி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, குடும்ப நல கோர்ட்டு நீதிபதி தனசேகரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி ஷகிலா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகள் கருப்பசாமி, செந்தில்ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். 
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சிவில், ஜீவனாம்சம், மணவாழக்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் வாகன விபத்து வழக்குகள் என 700 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில் ரூ.3 கோடியே 79 லட்சத்து 89 ஆயிரத்து 753 மதிப்பில், 156 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 337 பயனாளிகள் பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story