திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரத்திற்கு தடை விதிப்பால், ஜி-கார்னர் திடலில் இன்று முதல் சில்லறை காய்கறி விற்பனை
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரத்திற்கு தடை விதிப்பால், ஜி-கார்னர் திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சில்லறை காய்கறி விற்பனை அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணிவரை நடைபெறுகிறது.
திருச்சி
கொரோனாவால் தடை
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, கோவில் விழாக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருமண விழா மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் பொது இடங்களில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனிநபர் இடைவெளியையும் கடைப்பிடிப்பது அவசியமாகும். பஸ்களில் பயணிகள் நின்றுகொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்து விட்டது.
சில்லறை வியாபாரத்திற்கு மறுப்பு
திருச்சி காந்தி மார்க்கெட் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் எதிரொலியாக, காந்தி மார்க்கெட்டில் தரக்கடை மற்றும் சில்லறை கடைகளில் விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேவேளையில் இரவு நேரம் மட்டும் மொத்த வியாபாரம் செய்வதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கு மாற்று இடமாக ரெயில்வேக்கு சொந்தமான பொன்மலை ஜி- கார்னர் திடலை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி கொடுத்துள்ளது. அதன்படி, ஜி-கார்னர் திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சில்லறை வியாபாரிகள் காய்கறி விற்பனையை தொடங்குகிறார்கள்.
ஜி-கார்னர் திடல்
அதற்கான முன்னேற்பாடு பணிகள் நேற்று மாலை ஜி-கார்னர் திடலில் நடந்தது. அங்கு மாநகராட்சி பணியாளர்கள் கடை அளவீடு செய்யப்பட்டது. இதுகுறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறியதாவது:-
அதிகாலை 4 மணி முதல்
கொரோனா 2-வது அலையை காரணம் காட்டி, காந்தி மார்க்கெட் சில்லறை காய்கறி விற்பனையை ஜி-கார்னர் திடலுக்கு மாற்றி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை சில்லறை வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்கிறார்கள். தினமும் அதுபோல வியாபாரம் நடக்கும். 800 கடைகளுக்கு மேல் அங்கு இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. அங்கு வியாபாரிகள் முக கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறோம். அதே வேளையில் காய்கறி வாங்க வரும் நுகர்வோரும் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story