உரம் விலை கிடுகிடு உயர்வு


உரம் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 11 April 2021 1:19 AM IST (Updated: 11 April 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் உரம் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரையில் உரம் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

வானம் பார்த்த பூமி

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாக தான் உள்ளது. பருவமழையை நம்பியும், கிணற்று பாசனம், கண்மாய் பாசனத்தை நம்பியும் தான் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆரம்ப காலக்கட்டத்தில் விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்தி வந்தனர். பின்னர் நாளடைவில் மகசூல் அதிகரிப்பதற்காக செயற்கை உரங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். விவசாயிகள் பயன்படுத்தும் உரத்திற்கு மத்திய அரசு மானியங்களை வழங்கி வந்தது. இதனால் உர விலையும் ஒரு கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

விலை நிர்ணயம்

 தற்போது பெட்ரோல், டீசல் விலையை கம்பெனிகளே நிர்ணயிப்பது போல உரத்தின் விலையையும் அந்தந்த கம்பெனிகளே முடிவு செய்கின்றன.மத்திய அரசு குறிப்பிட்ட அளவு மானியத்தை மட்டும் உர ஆலைகளுக்கு வழங்குகி்றது. எனவே உரம் விலை, பெட்ரோல் விலை மாதிரி எகிறி உயர்ந்து வருகிறது. அதனுடன் ஜி.எஸ்.டி. 5 சதவீதம் என்பதால் விலை அதிகரித்து உள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யும் பொட்டாஷ் உரத்தின் விலையை கம்பெனிகள் போட்டி போட்டு குறைத்தன.ஆனால் குறைத்த வேகத்திலேயே மறுபடியும் உயர்த்த தொடங்கினர். மானாமதுரை பகுதியிலும் உரம் விலை அதிகரித்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். தற்போது அதிகரித்து உள்ள உரம் விலை விவரம் வருமாறு:-
விலை உயர்வு
 ஒரு மூடை பொட்டாஷ் 550 ரூபாயில் இருந்து 950 ரூபாயாக உயர்ந்தது. அதே போன்று, அனைத்து பயிர்களுக்கும் அடியுரமாக பயன்படும் டி.ஏ.பி. 1,200 ரூபாயில் இருந்து 1,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. காம்ப்ளக்ஸ் உரங்கள் மூடைக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. யூரியா விலையும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
உரம் விலை உயர்வுக்கு காரணம் தற்போது டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகமானது தான். இதனால் உர மூடைக்கு கம்பெனி நிர்ணயித்ததை விட கூடுதல் விலைக்கு வியாபாரிகள் விற்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

விவசாயிகள் அதிர்ச்சி

தற்போது நெல் நடவு செய்யும் சமயத்தில் உர விலை உயர்வு விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தவித்து வரும் விவசாயிகள் உர விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழிலுக்குச் செல்லும் நிலை ஏற்படும். எனவே, உரங்களின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானாமதுரை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story