சேலத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 126 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 136 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 84 பேர், சங்ககிரியில் 8 பேர், ஆத்தூரில் 7 பேர், ஓமலூரில் 6 பேர், காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், கெங்கவல்லி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், கொளத்தூர், நங்கவள்ளி, தாரமங்கலம், வீரபாண்டி, மேட்டூர், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேருக்கும், எடப்பாடி, அயோத்தியாப்பட்டணம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முதியவர் பலி
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். 682 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே சேலத்தை சேர்ந்த 64 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
அறிகுறி
சேலம் டவுன் மற்றும் செவ்வாய்பேட்டை பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் பணியாற்றிய 10-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story