தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,317 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,317 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 April 2021 2:19 AM IST (Updated: 11 April 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,317 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,317 வழக்குகளில் ரூ.11½ கோடி தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி நெல்லை மாவட்ட கோர்ட்டுகளில் நேற்று 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.
நெல்லை கோர்ட்டு வளாகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான நசீர் அகமது தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் குடும்பநல நீதிபதி குமரேசன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி திருமகள், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தீபா, மகளிர் கோர்ட்டு நீதிபதி விஜயகாந்த், கூடுதல் சார்பு நீதிபதி கிரிஸ்டல் பபிதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதி வஷீத்குமார், மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதி பிஸ்மிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கெங்கராஜ், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா மற்றும் மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

ரூ.11½ கோடிக்கு தீர்வு

இதை தொடர்ந்து நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள 9 தாலுகாக்களில் அமைக்கப்பட்டிருந்த 19 அமர்வுகளில் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இதில் மொத்தம் 3 ஆயிரத்து 317 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோர்ட்டில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசம் முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட 3,281 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது இதில் ரூ.11 கோடியே 41 லட்சத்து 94 ஆயிரத்து 958 சமரச தொகை வழங்கப்பட்டு முடிக்கப்பட்டது. இதுதவிர கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத வங்கிக்கடன் வழக்குகள் 36 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் ரூ.24 லட்சத்து 14 ஆயிரம் சமரச தொகை வழங்கி முடிக்கப்பட்டன.  ஆக மொத்தம் ரூ.11 கோடியே 66 லட்சத்து 8 ஆயிரத்து 958 தொகை வழங்கப்பட்டுள்ளது.

Next Story