ஈரோட்டில் விதிகளை மீறி 19 பேரை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ பறிமுதல்; மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நடவடிக்கை


ஈரோட்டில் விதிகளை மீறி 19 பேரை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ பறிமுதல்; மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 April 2021 4:38 AM IST (Updated: 11 April 2021 4:38 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் விதிகளை மீறி 19 பேரை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்தார்.

ஈரோடு
ஈரோட்டில் விதிகளை மீறி 19 பேரை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்தார்.
ஆய்வு
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் இயங்கும் தினசரி காய்கறி மார்க்கெட், சம்பத் நகர், பெரியார் நகரில் இயங்கும் உழவர் சந்தைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை வியாபாரிகளும், பொதுமக்களும் கடைபிடிக்கிறார்களா? என்பது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்தை காலை 6 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அதேபோல் முக கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே மார்க்கெட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். மேலும் மார்க்கெட்டுக்குள் செல்லும் பொதுமக்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
ஷேர் ஆட்டோ பறிமுதல்
இதைத்தொடர்ந்து ஈரோடு மரப்பாலம் நால் ரோட்டில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த ஆட்டோவில் விதிகளை மீறி 19 பேரை ஏற்றி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஷேர் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
அபராதம்
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மரப்பாலம் நால் ரோட்டில் ஒரு ஷேர் ஆட்டோவில் விதிகளை மீறி 19 பேரை ஏற்றி வந்தது தெரியவந்தது. அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து, டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம். கொரோனா மற்றும் போக்குவரத்து விதிகளையும் மீறியதால் அந்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது போலீஸ் நடவடிக்கையும், வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கைக்கும் பரிந்துரைத்துள்ளோம்.
பொதுமக்களும் நோய் தொற்று அபாயத்தை உணர்ந்து இதுபோல் பயணிக்க வேண்டாம். மேலும் இன்றைய (அதாவது நேற்று) ஆய்வில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story