ரூ.709 கோடியில் அறிவிக்கப்பட்ட கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை


ரூ.709 கோடியில் அறிவிக்கப்பட்ட கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 April 2021 11:10 PM GMT (Updated: 10 April 2021 11:10 PM GMT)

கீழ்பவானி வாய்க்காலை பராமரிக்க ரூ.709 கோடியில் அறிவிக்கப்பட்ட திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு
கீழ்பவானி வாய்க்காலை பராமரிக்க ரூ.709 கோடியில் அறிவிக்கப்பட்ட திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கீழ்பவானி திட்டம்
ஈரோடு மாவட்டத்தின் மிகப்பெரிய பாசன திட்டமாக இருப்பது கீழ்பவானி திட்டம். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, கரூர், திருப்பூர் மாவட்ட பகுதிகளுக்கும் கீழ்பவானி திட்டத்தின் மூலம் பாசனம் அளிக்கப்படுகிறது. ஒற்றைப்படை மதகுகள், இரட்டைப்படை மதகுகள் என 2 வகை மதகுகள் மூலம் தலா 1 லட்சத்து 3,500 ஏக்கர் என்று மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
கீழ்பவானி வாய்க்கால் கரைகள் அமைக்கப்பட்டு சுமார் 70 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது வாய்க்கால் கரைகள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு உள்ளன.
மதகுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன. அணையில் போதிய தண்ணீர் இருந்தாலும், வாய்க்கால் கரை உடைப்பு பிரச்சினைகளால் கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்வது என்பது பிரச்சினைக்கு உரியதாக உள்ளது.
எதிர்ப்பு
எனவே வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க தமிழக அரசு ரூ.709 கோடியே 60 லட்சம் ஒதுக்கி இருக்கிறது.
இந்தநிலையில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைப்பு பணிகள் செய்ய ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 
இதனால் கசிவுநீர் மூலம் பாசனம் மற்றும் குடிதண்ணீர் பெறும் பகுதிகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், பராமரிப்பு பணி செய்வதால் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும், கடைமடை வரை முழுமையாக அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையிலும் இந்த பணிகள் இருக்கும் என்றும் விவசாயிகள் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
ஆதரவு
திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் கி.வடிவேல், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் கே.சி.ரத்தினசாமி, தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி, புகழூர் பாரி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கதிர்வேல் என்ற ஆறுமுகம், சண்முகராசு, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தற்போது ஒதுக்கப்பட்டு உள்ள ரூ.709 கோடியே 60 லட்சத்தில் 86 மதகுகள் சீரமைக்கப்பட உள்ளன. சிதிலம் அடைந்த 7 மதகுகள் முழுமையாக மறு கட்டமைப்பு செய்யப்படுகின்றன. பழைய பாலம் ஒன்று புதுப்பிக்கப்பட இருக்கிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எளிதில் கொண்டு செல்ல வசதியாக 14 இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளன. 120 மழைநீர் வடிகால் கட்டிடங்கள் சீரமைக்கப்படுகின்றன. பழுதடைந்த 10 கட்டமைப்புகள் மீண்டும் கட்டப்படுகின்றன. கால்வாய் பாலங்கள் 6-ம், தண்ணீரை சீராக அனுப்ப செய்யும் ரெகுலேட்டர் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படுகின்றன. 2 பாலங்கள் முழுமையாக புதிதாக கட்டப்பட உள்ளன. வெற்ற நீர் போக்கி ஒன்றும் கட்டப்பட இருக்கிறது. 65 கிலோ மீட்டர் தொலைவுக்கு கரைகள் கொட்டு மண்ணால் பலப்படுத்தப்படுகிறது.
கிளை வாய்க்கால்கள்
இதுபோல் கிளை வாய்க்கால்களில் 166 மதகுகள் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது. 19 மதகுகள் புதுப்பிக்கப்படுகின்றன. 164 இடங்களில் டிராப் எனப்படும் கால்வாய் இறக்கம் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது. 76 இடங்களில் இது புதுப்பிக்கப்படுகிறது. சீராக்கிகள் மறுகட்டுமானம் செய்ய 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 10 இடங்களில் இது சீரமைப்பு செய்யப்படுகிறது. 57 இடங்களில் சிறுபாலங்கள் மறு கட்டுமானம் செய்யப்பட உள்ளது. 2 சிறு பாலங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. 122 கிலோ மீட்டர் தொலைவுக்கு மண்ணால் கரைகள் பலப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு பழமை சிறிதும் மாறாமல் கீழ்பவானி வாய்க்கால் புதுப்பிக்கப்பட உள்ளது.
கோரிக்கை
இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். பவானிசாகர் அணையில் முழுமையாக தண்ணீர் இருந்தால் ஆண்டுக்கு 8½ மாதங்கள் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் விடப்படும். தற்போதைய நிலையில் முறைவைத்து தண்ணீர்           விடும் நிலையால், விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
போட்ட விதைகள் விளைச்சலாகி கிடைக்குமா என்ற சந்தேகத்திலேயே விவசாயிகளின் வாழ்க்கை ஓடிப்போய் விடுகிறது. ஆனால் விரைவில் தற்போதைய திட்டப்படி வாய்க்கால் சீரமைக்கப்பட்டால் முறைவைத்து தண்ணீர் வழங்கும் நடவடிக்கை தவிர்க்கப்படும். தொடர்ச்சியாக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். கிணறுகளில் தண்ணீர் பெருகும். தண்ணீர் விடப்படாத காலங்களில் அது விவசாயிகளின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படும். எனவே விரைந்து இந்த பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும்.
பிரச்சினை இருக்காது
விவசாயிகள் இந்த திட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் கீழ்பவானி வாய்க்காலில் பிரதான கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களில் மிகவும் சிதிலம் அடைந்த, பாழ் அடைந்த கட்டுமானங்கள் சீர் செய்யப்பட உள்ளது. தண்ணீர் செல்வதற்காக கட்டப்பட்டு தற்போது பழுது அடைந்து, தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ள தொட்டிப்பாலங்கள் மறுபடியும் புதிதாக கட்டப்பட உள்ளன. கரைகள் முற்றிலும் மண்கொட்டி ஏற்கனவே இருந்தபடியே புதுப்பிக்கப்படுகிறது.
இதனால் கசிவுநீர் தொடர்பான பிரச்சினைகள் இருக்காது. வாய்க்கால் பகுதி கிணறுகள், தடுப்பணைகள் இப்போது போன்றே தொடர்ந்து செயல்படும். வாய்க்காலில் கான்கிரீட் முழுமையாக அமைப்பதாக கூறப்படுவது உண்மைக்கு மாறான தகவலாகும். எனவே ஒட்டு மொத்தமாக அனைத்து விவசாயிகளும் கீழ்பவானி வாய்க்காலை பராமரித்து பாதுகாக்கும் இந்த திட்டத்தை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விவசாயிகள் சார்பாக அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story