5 ஆண்டுகளில் 8 யானைகள் ரெயிலில் அடிபட்டு சாவு


5 ஆண்டுகளில் 8 யானைகள் ரெயிலில் அடிபட்டு சாவு
x
தினத்தந்தி 11 April 2021 8:16 AM IST (Updated: 11 April 2021 8:41 AM IST)
t-max-icont-min-icon

கோவை பாலக்காடு இடையே அடிக்கடி ரெயிலில் அடிபட்டு யானைகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கோவை,

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர், கோவை-பாலக்காடு வழிதடத்தில் யானைகள் ரெயிலில் அடிபட்டு இறப்பது குறித்து தென்னக ரெயில்வேயிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தார்.

பாலக்காடு ரெயில்வே கோட்ட மூத்த பொறியாளர் ஆனந்தராமன் இதற்கு அளித்த பதிலில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2016- முதல் 2021-ம் ஆண்டுவரை 8 யானைகள் ரெயிலில் அடிபட்டு பலியாகியுள்ளது. 
மேலும் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் 'பி' லைனை 'ஏ' அருகில் மாற்றும் திட்டம் இல்லை. 2017 -ல் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு தண்டவாளத்தின் இருபுறமும் சீர் செய்வதற்கு ரூ.2கோடியே 43 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

 2020-ல் அகலப்படுத்துவதற்கு 5 கி.மீ தூரத்திற்கு ரூ.1 கோடியே 59 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகலப்படுத்துவதற்கு 3 கோடியே 10 லட்சம் ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
யானைகள் மீது ரெயில் மோதாமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ரெயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.

யானைகள் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

 இரவு நேரத்தில் பி லைனில் ரெயில் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். பி லைனை ஏ லைன் அருகே அமைப்பது மட்டும்தான் நிரந்தர தீர்வு.

என்ஜின் டிரைவர்கள் கொடுக்கப்பட்டுள்ள வேக வரம்பினை எவ்வாறு கடை பிடிக்கிறார்கள் ? என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் குறைந்த பட்சம் ஒரு கிலோ மீட்டர் தூரம் டிரைவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் இருபுறமும் உள்ள செடிகொடிகள் வெட்டப்பட வேண்டும். 

ரெயில் தூரத்தில் வரும்போதே யானைகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் சென்சார்கள் அமைக்கப்பட்டு ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

ரெயில்வே தெரிவித்துள்ள இந்த யானை பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாக செயல்படுத்த படுகிறதா? என்பதை கண்காணிக்க அதிகாரிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் சேர்ந்த குழு அமைக்கப்பட வேண்டும். 

இவை அனைத்தும் நடைமுறை படுத்தப்பட்டால் மட்டுமே ரெயில் மோதி யானைகள் இறப்பது தடுக்கப்பட முடியும்". இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story