கோவை மாவட்ட கலெக்டருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி


கோவை மாவட்ட கலெக்டருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி
x
தினத்தந்தி 11 April 2021 8:16 AM IST (Updated: 11 April 2021 8:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் அரசு ஆஸ்பத்திரியில் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன், கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

அப்போது ஆஸ்பத்திரி டீன் நிர்மலா மற்றும் சுகாதார துறையினர் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர் நாகராஜன் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 2 லட்சத்து 16 ஆயிரத்து 158 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

 25 ஆயிரத்து 544 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அந்த வகையில், மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 702 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாக தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 484 ஆண்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 219 பெண்களும் தடுப்பூசியை போட்டு உள்ளனர். 

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் தான் அதிகமாக தடுப்பூசி போடப்படுகிறது.  அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

மாவட்டம் முழுவதும் 78 அரசு மையங்களும், 102 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 

தற்போது மாவட்ட சுகாதார துறையிடம் 18 ஆயிரம் தடுப்பூசிகளும், அரசு ஆஸ்பத்திரியில் 4 ஆயிரத்து 260 தடுப்பூசிகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் 26 ஆயிரத்து 160 த டுப்பூசிகள் என மொத்தம் 55 ஆயிரத்து 690 தடுப்பூசிகள் இருப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story